Monday, 15 October 2012

சிந்தனைச் சிறகுகள் !



சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன
சிந்தனை என்ற சொல் கேட்டு- என்
சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன!
வணக்கம் ! என் வணக்கம் ! என் கண்மணி வணக்கம் !
  
மலர்ந்தேன் நான் ! கமலமென மலர்ந்தேன் யான் !
சிந்தனைச் சிறகுகள் தலைப்பினைக் கண்டே !
இக் காவிரி நாடன் விரிந்தான் - வியந்தான்
சிந்தனைச் சிறகுகள் முளைக்க -முகிழ்க்க
முகிழ்த்தன இறக்கைகள் எனும் தமிழார்வம் !
  
குன்றேறி சிராப்பள்ளிக் குன்றேறிப்
பறந்து வந்தது இப்பறவை !
தமிழ்ப் பறவை ! தஞ்சைப் பறவை !
தஞ்சைசார் பறவை !
  
விஞ்சு புகழ் கொஞ்சு  தமிழ்க் குலவிவர
விண்முட்டும் பெருங்கோயில் -தஞ்சைப் பெருங்கோயில்
மீதமர்ந்தே வளர்ந்த இப்பறவை தமிழ்ப் பறவை
சிலிர்த்தெழுந்தே வந்தது இப்பறவை !

வங்கிப் பணி ! சங்கப்பணி ! தொழிற்சங்கப்பணி - வேறறியா 
வெறும் பற்றாளன் ! தமிழ்ப் பற்றாளன் யான் - அதுவே
தகுதியாயின் எதுகை மோனை சீர் தளை சந்தம் தேடாது
விரியட்டும் உங்கள் சிந்தனைச் சிறகுகள் !

வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன தமிழ்
வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன - தமிழ்
எண்ணப் பறவைகள் சிறகடித்து சிந்தனைத் தேன்
வண்ணச் சிதறலாகி சிந்தனை சிறகடிக்கின்றன !

வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள் தமிழ்
வண்ணச் சீரடிகொடுத்தவனும் அவனே - தமிழ்
எண்ணச் சீரடி இளங்கோவடிகள் அவனே
கண்ணகியைக் கற்புக்கொரு கண்ணகியைக் காட்டியவனே !

சிந்திக்கிறவன் மனிதன் ! சிந்திக்க வைப்பவனும் அவனே !
சிந்திக்க மறுப்பவனோ மிருகம் ! நிந்திப்பவனும் அவனே !
சிந்திப்பவனை நிந்திப்பவனும் அவனே !
ஆயின் மிருகமன்றோ அவனே !
  
சிந்தனைக்கு கால நேரமுண்டோ எல்லையுமுண்டோ ? 
எழிலார் சிந்தனைக்கு !   மொழியில்லை ! பழியும் உண்டே!
சிந்தனைக்கு உண்டு அவன் கால நிந்தனை ! 
காலம் கடந்த வந்தனை உண்டு சிந்தனைக்கு!
இறையானான் மண்தனுக்கு இரையான பின்தானே !
  
கல்லால் அடித்தான் அவனை - கலிலியோ கலிலி
செத்தும் ஒழிந்தான் அவன் கல்லால் அடிபட்டு
கொடும் நஞ்சன்றோ பரிசு - ஏதென்சு சாக்ரடீசுக்கு
சொல்லால் அடித்தான் அவனை - ஆர்கிமிடீசு அவனே !

ஒழித்தார்கள் இவர்களை ! ஒழிந்தார்கள் இவர்களும் இவன்களும்
ஆனாலோ அவன் கண்டு பிடிப்புகளும் சொல்லிட்ட கண்டிட்ட
தத்துவங்களும் ஒழியவில்லை ! அழியவில்லை !
சாகாவரம் பெற்ற இவர்களோ நிலத்து வாழ்கிறார்கள் !

இறைவனையும் மறுத்தான் ! இறைவனையே
மறுத்தான்  இங்கர்சால்  - மறுத்தான்
இங்கு ஒரு சால் ! சால் நிறை பெரியார்
இங்குமொரு பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் !
  
புதுமைப் பெண் கண்ட பாரதியோ கூறுகிறான்! கூவுகிறான்!
நாணும் அச்சமும் நாய்கட்கே வேண்டுமாம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் !
  
விடுதலைக் கும்மி அடிக்கிறான் ! பெண் 
விடுதலைக் கும்மி அடிக்கிறான் !  கூறியவன் 
பாட்டுக்கொரு புலவன் பாரதி !  கூவியவன் 
புரட்சிக்கவியவன்  பாரதி !  சிந்தனைச் சிறகுகள் முகிழ்த்த
சிந்தனைக் கவியவன் ! கவிச் சித்தனும் அவனே !

வாழ்கிறார்கள் ! இவர்கள் வாழ்கிறார்கள் !
கொள்கைகளில் ! இவர்தம் கொள்கைகளில் !
கொடியவர்கள் அவர்கள் ! கல்லால் அடித்தக் கொடியவர்கள் !
சொல்லால் அடித்த கொடியவர்கள் !

நாமோ கல்லறைக்கு வணக்கம் சொன்னோம் !
அவர்தம் சிந்தனைக்கு மலர் வளையம் கண்டோம் !
நானோ விளிக்கிறேன்! சிந்தனைச் சிறகுகள் விரித்த உங்களை !
அழைக்கிறேன் ! சிந்தனைப் பறவைகளே !

வாழும்போதோ கல்லடி ! சொல்லடி !
பாராட்டும் சீராட்டும் வாழ்வு முடிந்த பின்போ !
வேண்டாம் இந்தப் பொய் முகம் ! வேண்டாம்
பொய் நிறை நடப்பு ! நடிப்போ நடிப்பு !

எந்தனைக் கேளிர் ! எந்தனைக் கேளிர் !
வருகவென அழைக்கின்றேன் ! வாருங்கள்!
தருகவென அழைக்கின்றேன் தாருங்கள் !
தருவோம் மலர்ச்செண்டை வாழும்போதே !

கூறுங்கள் தெய்வமென்றே ! சிந்தனையே தெய்வமென்றே !
காணமுடியாது ! காணமுடியாது ! தெய்வத்தினையே !
சிந்தனையைக் காணமுடியாது கண்ணால் !
மனக்கண்ணால் காணமுடியும் தெய்வத்தினையே !

உணரமுடியும் அதனையே ! உணரமுடியும் சிந்தனையையே !
மனக்கண்ணால் உணரமுடியும் ! ஒன்றன்றோ இரண்டும் !

வேண்டாம் சிந்தனை ! வேண்டாம் சிந்தனை !
வேண்டுவதோ முயற்சி ! வேண்டுவது எண்ணம் !
சிந்திக்கவென்றே ! பிறக்கின்றான் சிந்தனையாளனும் !
முகிழ்க்கின்றன சிந்தனைச் சிறகுகள் !

மடை திறந்த வெள்ளமன்றோ ! சிந்தனை மடை திறந்த வெள்ளமன்றோ !
மடைதிறக்க வேண்டாவோ ! மனமெனும் மடைதிறக்க வேண்டாமோ !
சிந்தனை வெள்ளமெனப் பாய சிந்தனை வெள்ளமெனப் பாயும் !
சிந்தனைச் சிறகுகளே ! சிந்தனைச் சிறகுகளே !

No comments:

Post a Comment